அரூர் அருகே லாரி மோதி முதியவர் பலி
அரூர்:
ஈரோடு மாவட்டம் பிராமண பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்தவர் குத்புதீன் (வயது 61). அதே பகுதியை சேர்ந்தவர் ஷேக்தாவூத் (62). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று ஈரோட்டில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக திருவண்ணாமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஷேக்தாவூத் ஓட்டி சென்றார். நரிப்பள்ளி-திருவண்ணாமலை சாலையில் தெத்தேரி காப்புக்காடு பகுதியில் அவர்களது முன்னால் சென்ற லாரி திடீரென இடதுபுறமாக திரும்பியது. இதனால் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்பக்கமாக மோதியது. இதில் ஷேக்தாவூத் சம்பவ இடத்திலேயே பலியானார். குத்புதீன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் குத்புதீனை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான ஷேக்தாவூத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.