அரசு பஸ்-லாரி நேருக்குநேர் மோதல்; 5 பேர் படுகாயம்
பழனி அருகே அரசு பஸ், லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருவெம்பா பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). லாரி டிரைவர். இன்று இவர், பழனியில் இருந்து கோவை நோக்கி லாரியில் சரக்குகளை ஏற்றி சென்று கொண்டிருந்தார். பழனி அருகே தாழையூத்து என்னுமிடத்தில் லாரி வந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து பழனி நோக்கி வந்த அரசு பஸ், லாரி மீது நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கியிருந்த லாரி சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பஸ்சில் பயணம் செய்த 4 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களும், பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.