போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்


போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்
x

சாலை விதிமுறைகள் குறித்து அரசு அறிவித்த புதிய விதிமுறைகளை கடைபிடித்தார் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள்,பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை


சாலை விதிமுறைகள் குறித்து அரசு அறிவித்த புதிய விதிமுறைகளை கடைபிடித்தார் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள்,பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கு சிவப்பு கம்பளம்

நாட்டில் பெருகிவரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி செல்வது விபத்துகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று அமைகிறது. சாலை விபத்துகளால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோகிறது. உடல் உறுப்புகளை இழப்பவர் பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இந்தநிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகையை பலமடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.100 முதல் ரூ.ஒரு லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திரரெட்டி பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு விதிமுறை

பல மடங்கு அதிகரிக்கப்பட்ட அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா? இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது குறித்த மக்கள் பார்வை வருமாறு:- சிவகங்கை மாவட்ட சாலைபாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் ஜெ.பிரகாஷ் மணிமாறன்: - தமிழக அரசு சாலை பாதுகாப்பு விதிமுறை களை அனைவரும் கடைபிடித்து தங்களது உயிரை பாதுகாப்பதற்காக சட்டம் இயற்றுகிறது. அந்த சட்டத்தை நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்கும்போது தான் இயற்றப் பட்ட சட்டம் முழுமையாக வெற்றி பெறுகிறது.

ஆனால் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அலட்சியப ்படுத்தும்போது தான் இதுபோன்று கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப ்படுகிறது. எனவே ஒரு மனிதனின் உயிர் பெரியதா அல்லது அபராத தொகை பெரியதா என்று பார்க்கும் போது அதில் விலை மதிப்பில்லாத உயிர் தான் முக்கியமாக கருதப் படுகிறது. இனிமேலாவது அனைவரும் தங்களது குடும்பத்தை எண்ணி பார்த்து சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து அரசிற்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

சரியான சட்டம்

காரைக்குடி கல்லூரி மாணவி கனிகா தேவி: சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு விதித்துள்ள இந்த அபாரதம் என்பது அரசிற்கு வருமானம் அல்ல. அவை மக்களின் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். பொதுவாக வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வேகமாக செல்லும் இளைஞர்கள் ஆபத்தில் அவர்கள் மட்டும் கீழே விழுந்து உயிர் பலி ஏற்படுவது மட்டுமல்ல. எதிரே வரும் வாகன ஓட்டிகளின் உயிரை பறிக்கும் செயலாகவும் இருக்கும். இதை போலீசார் எவ்வளவு அறிவுறுத்தினாலும் அவர்கள் அதற்கு செவி சாய்ப்பது இல்லை. ஆனால் இவ்வாறு சட்டம் கொண்டு செயல்படுத்தினால் இதுபோன்று செயல்கள் குறையும். ஏற்கனவே எனது தம்பி இதேபோல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாலை விபத்தில் பலியான சம்பவம் இனிவரும் காலங்களில் யாருக்கும் ஏற்படக்கூடாது. எனவே அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்.

அபராத தொகை அதிகம்

சிங்கம்புணரி சமூக ஆர்வலர் சரவணன்: சமீப காலமாக மோட்டார் சைக்கிள் வாகனங்களை சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். பெற்றோர்களும் அவர்களை நம்பி வாகனத்தை கொடுத்து ஓட்ட சொல்வது விபத்தை ஏற்படுத்த கூடிய செயலாகும். சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்பட்டு உள்ளது. இதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் வாகன விபத்தில் பலியானோர் எண்ணிக்கையில் 4-வது இடத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் தற்போது நடக்கும் செயல்களை பார்த்தால் முதல் இடத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இதுதவிர பள்ளி வாகன ஓட்டுனர்கள், தனியார் பள்ளி வேன் ஓட்டுனர்கள், மாத கார் வாடகை ஓட்டுனர்களின் சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் சரியானதாக உள்ளதா என தொடர்ந்து ஆய்வு மேற்கொண் டால் விபத்தை குறைக்க முடியும். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள அபராத தொகை என்பது சரியான செயல். அப்போது தான் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற அக்கறை அனைவருக்கும் வரும்.

தேவகோட்டை ரஸ்தா ராமஅமிர்தம்: சாலை விதிமுறை களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் அதே சமயம் ஏழை, எளிய மக்களிடம் கொள்ளையடிப்பதுபோல் அரசு அதிக கட்டணமாக அபராதம் என்ற பெயரில் விதிப்பது மக்களிடம் இருந்து கொள்ளை அடிப்பதற்கு சமமான செயலாகும். இன்றைய காலக்கட்டத்தில் தினந்தோறும் ரூ.100 முதல் ரூ.500 வரை சம்பாதிக்க ஏழை, எளிய மக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை அபராதம் விதிப்பது எந்த வகையில் நியாயம். மேலும் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் குடிக்க தோன்றும் வகையில் அரசே மதுக்கடை வைத்து நடத்துகிறது. யாரிடம் போய் அபராதத்தை விதிப்பது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story