வேப்பனப்பள்ளியில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி தாலுகா பாலனப்பள்ளி அருகே உள்ள காட்டயம்வீடு கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22). இவர் கடந்த 27-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வேப்பனப்பள்ளியில் சென்று கொண்டிருந்தார். எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர், மாதேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாதேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி தாலுகா எர்ரண்டப்பள்ளியை சேர்ந்தவர் தியாகராஜ் (வயது 32). இவர் கடந்த 27-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வேப்பனப்பள்ளியில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை ஷோரூம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.