திருமணமான 7 மாதத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தச்சர் பலி
மத்தூர்:
மத்தூர் அருகே திருமணமான 7 மாதத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தச்சர் பலியானார்.
தச்சர்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 28). தச்சர். இவருக்கும், கோகிலா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே பசுபதி வேலைக்காக வெளியூர் சென்றார்.
பின்னர் வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மத்தூர் அருகே அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வளைவில் திரும்பியபோது, சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.
பலி
இதில் பலத்த காயம் அடைந்த பசுபதி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் மத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பசுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 7 மாதத்தில் விபத்தில் தச்சர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.