விபத்தில் வக்கீல் பலி
விபத்தில் வக்கீல் பலியானார்.
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 62). வக்கீல். இவரது மனைவி தேன்மொழி (59). இவர்கள் இருவரும் அ.நாட்டாமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டாக்டரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வீட்டுக்கு பேளூர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அனுப்பூரை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் குள்ளம்பட்டியில் இருந்து அனுப்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். ஏ.என்.மங்கலம் பஸ் நிறுத்தம் அருகே எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கீழே விழுந்ததில் சந்திரசேகரன், தேன்மொழி, மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சந்திரசேகரனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சந்திரசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.