திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்
திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை தமிழ்நாட்டையும், கர்நாடகாவையும் இணைக்கும் முக்கிய பாதையாகும். அதனால் இந்த பாதை வழியாக எப்போதும் இரு மாநில வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சாதாரணமாக வரும் வாகனங்கள் இந்த கொண்டை ஊசி வளைவுகளை கடந்து விடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்று விடுகின்றன. அல்லது விபத்தில் சிக்குகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மினி லாரி கவிழ்ந்தது
இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது.
நேற்று காலை 8 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 23-வது கொண்டை ஊசி வளைவை மினி லாரி கடந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். ரோட்டின் ஓரத்தில் மினி லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
கிரேன் மூலம் மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார்கள். பின்னர் மதியம் 1 மணி அளவில் கிரேன் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்து கிடந்த மினி லாரி நிலை நிறுத்தப்பட்டது.
இந்த பணி நடைபெறும்போது மட்டும் திம்பம் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.