ரெயில்வே மேம்பாலத்தில் மோதி கார் கவிழ்ந்து பாட்டி-பேரன் பலி
மதுரை சமயநல்லூர் அருகே ரெயில்வே மேம்பாலத்தில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் பாட்டி, பேரன் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாடிப்பட்டி,
மதுரை சமயநல்லூர் அருகே ரெயில்வே மேம்பாலத்தில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் பாட்டி, பேரன் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரில் வந்தனர்
பெங்களூரு முருகேஷ் பாலையா என்.ஆர்.காலனியை சேர்ந்தவர் இசையரசு. இவருடைய மகன் கிருஷ்ணகுமார் (வயது 39). இவர் அங்குள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். இவருடைய மனைவி நான்சி (33). இவர்களுடைய ஆண் குழந்தை சேரப் நேசகுமரன்(3)
ராமேசுவரம் கோவிலுக்கு வருவதற்காக நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகுமார் குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர். அவருடன் மனைவி நான்சி, மகன் சேரப் நேசகுமரன், மாமியார் நிர்மலா (54) ஆகியோர் வந்தனர். காரை தசரஹள்ளியை சேர்ந்த டிரைவரான மற்றொரு கிருஷ்ணகுமார் (36) ஓட்டிவந்தார்.
பாட்டி-பேரன் பலி
கார் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே திண்டுக்கல்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி, அங்கிருந்த பாலத்தின் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காருக்குள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், கிருஷ்ணகுமார், நான்சி, குழந்தை சேரப் நேசகுமரன், டிரைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை சேரப்நேசகுமரன் பரிதாபமாக இறந்தது.
போலீசார் விசாரணை
படுகாயம் அடைந்த கிருஷ்ணகுமார், நான்சி, டிரைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில்வே மேம்பாலத்தில் கார் மோதி, பாட்டி-பேரன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.