மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பலி
பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பக்தர்கள் பலி
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் முகேஷ்கண்ணா (வயது 24). தனியார் வங்கி ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (24). எலக்ட்ரீசியன். நண்பர்களான இவர்கள் 2 பேரும், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு முகேஷ்கண்ணா, பூபாலன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆட்டையாம்பட்டியில் இருந்து பழனிக்கு நோக்கி வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் இவர்கள், பழனி அருகே கருப்பணகவுண்டன்வலசு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு முகேஷ்கண்ணாவும், பூபாலனும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீஸ் விசாரணை
இதற்கிடையே அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கி 2 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பலியான முகேஷ்கண்ணா, பூபாலன் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.