காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மூதாட்டி பலி
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். விவசாயி. இவருடைய தாய் மங்கம்மாள் (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கோவிந்தராஜன், மங்கம்மாளை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
காரிமங்கலம் அருகே பாலக்கோடு ரோடு ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், கோவிந்தராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த மூதாட்டி மங்கம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மூதாட்டி பலி
அவரை அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் கோவிந்தராஜன் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மங்கம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான மங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.