கார் மோதி கணவர் பலி; பெண் படுகாயம்
விபத்தில் கணவர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சவேரியார்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 57). இவருடைய மனைவி கலைச்செல்வி (45). இந்நிலையில் கலைச்செல்விக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கோட்டைச்சாமி சிகிச்சைக்காக ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் அங்கு சிகிச்சை முடிந்து இருவரும் மீண்டும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திருவாடானையில் இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக கோட்டைச்சாமி சென்ற மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோட்டைச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கலைச்செல்விக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோட்டைச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.