ஆத்தூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


ஆத்தூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

சேலம்

ஆத்தூர்:

இறைச்சி கடை

ஆத்தூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 41). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று காலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஈச்சம்பட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற லாரி முத்துக்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மதுரை மாவட்டம் பாலமேடுவை சேர்ந்த தனசேகர் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டீ மாஸ்டர்

ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவருடைய மகன் கார்த்திக் (26). இவர் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கார்த்திக் கோபாலபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ் கார்த்திக் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயத்துடன் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான வாழப்பாடி அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story