சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதல்: பிறந்த நாள் கொண்டாட வந்த கல்லூரி மாணவர், நண்பருடன் சாவு-மற்றொருவர் படுகாயம்
சேலம் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பிறந்த நாள் கொண்டாட வந்த கல்லூரி மாணவர், நண்பருடன் பரிதாபமாக இறந்தார். இதில் மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.
பனியன் நிறுவனம்
சேலம் சீலநாயக்கன்பட்டி பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் ரஞ்சித்குமாருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள்.
நேற்று முன்தினம் காலையில் அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்ததும் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக ஓமலூர் அருகே பாகல்பட்டியை சேர்ந்த சங்கர் மகன் கவுதம் (19), சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர் (22) ஆகிய 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சீலநாயக்கன்பட்டியை நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளை சுந்தர் ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.
கல்லூரி மாணவர் சாவு
சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற சரக்கு வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேரும் பலத்த காயத்துடன் சாலையில் உயிருக்கு போராடினர்.
இதைப் பார்த்த அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது கல்லூரி மாணவரான ரஞ்சித்குமார் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேலும் ஒருவர் சாவு
பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக இறந்தார். சுந்தர் பலத்த காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான 2 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் பிறந்த நாள் கொண்டாட நண்பர்களுடன் வீட்டிற்கு வந்த போது விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் ரஞ்சித்குமார், அவருடைய நண்பர் கவுதம் ஆகியோர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.