பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதல்; டிரைவர் படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வடகால் அருகே உள்ள கோடம்குடியை சேர்ந்தவர் பட்டாபிராமன் (வயது 38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பல்லடத்தில் இருந்து லாரியில் கோழித்தீவனம் ஏற்றி கொண்டு, ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோட்டமேடு பெரிய ஏரி பகுதியில் சேலம்-அரூர் ரோட்டில் சென்றபோது, எதிரே மற்றொரு லாரி வந்தது. அந்த லாரி திடீரென பட்டாபிராமன் ஓட்டி சென்ற லாரி மீது நேருக்குநேர் மோதி, சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பட்டாபிராமன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.