கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த வாகன ஓட்டி


கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த வாகன ஓட்டி
x

உடுமலையில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கழிவுநீர் கால்வாயில் வாகன ஓட்டி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

திருப்பூர்

உடுமலையில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கழிவுநீர் கால்வாயில் வாகன ஓட்டி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

தரைமட்ட பாலம் சேதம்

உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே பொள்ளாச்சி - பழனி, உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்ததுடன் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பணி தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் கால்வாயை இணைக்கும் வகையில் சிலாப்கற்கள் வைத்து தற்காலிக பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

கால்வாயில் விழுந்த வாகன ஓட்டி

இந்தநிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்துடன் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தவறி கால்வாயின் உள்ளே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பத்தினர் விரைந்து வந்துஅவரை மீட்டனர்.

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த விபத்து நடைபெற்றதாக வாகன ஓட்டிகள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

விரைந்து முடிக்க வேண்டும்

நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலை உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்ததையொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த 8 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்று வரை பணிகள் நடைபெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கால்வாயின் மீதுள்ள தற்காலிகமாக சிமெண்ட் சிலாப் பாதை வழியாக சென்று வருகின்றனர். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலை கால்வாயை கடக்க முயன்ற வாகன ஓட்டி நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கால்வாயில் விழுந்துவிட்டார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. தக்க தருணத்தில் பாலம் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது.

இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Related Tags :
Next Story