மோட்டார்சைக்கிள்- தனியார் பஸ் மோதல்:பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாப சாவுபர்கூர் அருகே விபத்து


மோட்டார்சைக்கிள்- தனியார் பஸ் மோதல்:பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாப சாவுபர்கூர் அருகே விபத்து
x
தினத்தந்தி 28 April 2023 12:30 AM IST (Updated: 28 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள், தனியார் பஸ் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.

தனியார் பஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி சாலையை சேர்ந்த சென்னையன் மகன் தியாகராஜ் (வயது 27). இவர் நேற்று தனது உறவினர்களான பர்கூர் இ.டி.ஆர். நகரை சேர்ந்த ஜலபதி மகன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஹேம்நாத் (20) மற்றும் பர்கூர் கரீப் சாகிப் தெருவை சேர்ந்த பிருதிவிராஜ் (23) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடந்த கைப்பந்து போட்டியை காண்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மல்லப்பாடி அருகே நாடார் கொட்டாய் கிராமம் அருகே வந்தபோது தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் பயங்கரமாக மோதி கொண்டன.

3 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தியாகராஜ், ஹேம்நாத், பிருதிவிராஜ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மும்தாஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

மேலும் விபத்துக்குள்ளான தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பர்கூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story