பரமத்திவேலூரில் கார் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் படுகாயம்-ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவரின் கார் டிரைவர் கைது
ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவரின் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
மாவட்ட ஊராட்சி தலைவர் கார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா தூக்கநாயக்கன்பாளையம் அருகே உள்ள கள்ளிக்காடு வழங்கையான் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவருடைய மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 18-ந் தேதி நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணிக்கு வழங்கிய அரசு வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். பரமத்தி வேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே இந்த கார் வந்த போது சாலையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
2 பேர் படுகாயம்
இதில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற அனிச்சம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரது மகனும் கல்லூரி மாணவருமான பிரஜித் (19), நன்செய் இடையாறை சேர்ந்த ராஜேந்திரன் மகனும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குமான கண்ணன் (19) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் போலீசார், சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் காரின் டிரைவரும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா தூக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவரது மகன் முகேஷ் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.