லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்


லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
x

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி

கூடலூரை அடுத்த லோயர்கேம்ப்பில் இருந்து குமுளிக்கு மலைப்பாதை உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் இந்த மலைப்பாதையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த ஏராளமான மரங்கள் உள்ளன. தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ஜீப்களில் தோட்ட தொழிலாளர்களை இந்த மலைப்பாதை வழியாக செல்கின்றனர். அதேபோல் கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், புனித யாத்திரை மேற்கொள்ள வரும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களும் இந்த பாதையில் சென்று வருகின்றன.

இந்தநிலையில் லோயர்கேம்ப்-குமளி மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் சாலையோரம் பட்டுப்போன நிலையில் மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் மழைக்காலத்தில் அல்லது பலத்த காற்று வீசும்போது வேரோடு சாய்ந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கூடலூர், கம்பம் வனத்துறை அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்குள்ளாக லோயர்கேம்ப்-குமளி மலைப்பாதையில் பட்டுப்போன நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வனத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story