ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் மோதல்: பள்ளி தலைமை ஆசிரியை பலி மகள் கண் எதிரே பரிதாபம்


ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் மோதல்:  பள்ளி தலைமை ஆசிரியை பலி  மகள் கண் எதிரே பரிதாபம்
x

ராசிபுரம் அருகே மகள் கண் எதிரே விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பலியானார்.

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே மகள் கண் எதிரே விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பலியானார்.

தலைமை ஆசிரியை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி காந்திமதி (வயது 55). இவர் பேளுக்குறிச்சி அருகே உள்ள மேலப்பட்டி அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு முத்துமணி (27), சவுந்தர்யா (25) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் முத்துமணிக்கு திருமணமாகி விட்டது.

இதற்கிடையே சவுந்தர்யாவுக்கு பல் வலி இருந்ததாகவும், அதற்காக சேலத்தில் உள்ள பல் ஆஸ்பத்திரிக்கு இளைய மகளை அழைத்துக்கொண்டு மொபட்டில் தலைமை ஆசிரியை காந்திமதி புறப்பட்டார்.

பலி

ராசிபுரம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் மொபட் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காந்திமதியும், அவருடைய மகளும் தூக்கி வீசப்பட்டனர். இதில் காந்திமதி சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். மகள் சவுந்தர்யா கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் சவுந்தர்யா லேசான காயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராசிபுரம் செக்கடி தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (28) என்பவரும் காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சவுந்தர்யா, சந்தோஷ்குமார் இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போலீசார் பலியான காந்திமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் திரண்டனர்

இந்த விபத்து குறித்து ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சக ஆசிரியர்கள் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். மகளின் கண் எதிரே தாய் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story