கயத்தாறு அருகே விபத்து:கார் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலி


தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். மேலும் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். மேலும் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

ஜவுளி வாங்க சென்றவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு ஆர்.சி. காலனியை சேர்ந்தவர் எட்வின். அவரது மனைவி மேரி கிரி சாந்தி (வயது 44).

அதே பகுதி ஓனரிஸ் காலனியை சேர்ந்தவர்கள் கெலபின் மனைவி விண்ணரசி (43), ஜோசப் ஆண்டனி மனைவி ரோஸ்லின் (42), ரபீல்தாஸ் மகள் பேபி ஷாலினி (27).

இவர்கள் அனைவரும் உறவினர் வீட்டு திருமணத்துக்கு ஜவுளி வாங்குவதற்காக கோவைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை எட்வின் ஓட்டினார்.

கார் கவிழ்ந்தது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேசிய சுங்கச்சாவடி அருகே நேற்று அதிகாலை வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த மேரி கிரி சாந்தி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் பரிதாபமாக இறந்தார்.

விண்ணரசி, ரோஸ்லின், பேபி ஷாலினி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story