கோவில்பட்டி அருகே விபத்து: என்ஜினீயர் தலை துண்டாகி பலி


தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் தலை துண்டாகி பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் டிப்ளமோ என்ஜினீயர் தலை துண்டாகி பலியானார்.

டிப்ளமோ என்ஜினீயர்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அஜித் (வயது 25), டிப்ளமோ என்ஜினீயர்.

இவர் வேலைக்காக பெங்களூருவில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு நேர்முக தேர்வில் பங்கேற்றுவிட்டு, நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்டார்.

தலை துண்டாகி பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அஜித் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது, திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் அஜித் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் சிறிது தூரத்தில் கிடந்தது.

பெற்றோர் கதறல்

இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அஜித் உடல், தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அஜித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

சோகம்

கோவில்பட்டி அருகே சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் டிப்ளமோ என்ஜினீயர் தலை துண்டாகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story