திம்பம் மலைப்பாதையில் விபத்து: 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த மினி லாரி


திம்பம் மலைப்பாதையில் விபத்து:  50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த மினி லாரி
x

திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 50 அடி பள்ளத்தில் மினி லாரி உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 50 அடி பள்ளத்தில் மினி லாரி உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

திம்பம் மலைப்பாதை

சத்தியமங்கலத்தை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விழுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று சிவகாசியில் இருந்து பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று மாலை சென்று கொண்டிருந்த போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது.

50 அடி பள்ளத்தில்...

இந்த விபத்தில் கிரானைட் கற்களை ஏற்றி வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு மலைப்பாதையில் உள்ள 50 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த மினி லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story