லாரி மீது கார் மோதல்; பஞ்சு வியாபாரி படுகாயம்
பல்லடம்:
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே நேற்று கோவையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது லாரிக்கு பின்னால் பல்லடம் லட்சுமி மில் பகுதியை சேர்ந்த பஞ்சு வியாபாரி சந்தான கிருஷ்ணன் (வயது 57) காரில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி டிரைவர் பிரேக் போட்டதால், சந்தான கிருஷ்ணன் ஓட்டி வந்த கார் டேங்கர் லாரியின் பின் பகுதியில் மோதியது. அப்போது அவருடைய காருக்கு பின்னால் வந்த சரக்கு வேன் ஒன்று, சந்தானகிருஷ்ணன் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சந்தானகிருஷ்ணனின் கார் உருக்குலைந்து போனது. தகவல் அறிந்த பல்லடம் போலீசார் விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்த சந்தானகிருஷ்ணனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை- திருச்சி மெயின் ரோட்டில் அதிகரிக்கும் வாகன விபத்துக்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் எனவே போக்குவரத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.