4 வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்
4 வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்4 வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்4 வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்
திருப்பூர் அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 8 மணிக்கு கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அவினாசி-திருப்பூர் சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த கார் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ், அவினாசியில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு சென்ற டவுன் பஸ், ஒரு கார் மற்றும் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அலறியடித்தபடி ஓடினார்கள்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நிலையில் காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து ஓட்டி சென்றார். இதையடுத்து 2 பஸ்கள் உள்பட 4 வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்பட்டன. பஸ்களில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு, வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரமாக போலீசார் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினார்கள்.
இந்த விபத்தில் 2 பஸ்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட 4 வாகனங்களும் சேதமடைந்தன. காரை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? அல்லது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.