256 பேர் சாலை விபத்தில் பலி
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 256 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொழில் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டம். இங்கு பின்னலாடை தொழில், கறிக்கோழி வளர்ப்பு, விசைத்தறி, பாத்திர உற்பத்தி தொழில், எண்ணெய், அரிசி ஆலைகள், விவசாயம் நடக்கிறது. தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல், வெளிமாநில மக்களும் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.
இதன்காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகன நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் என்பது குறைவு. விதிமீறும் வாகன ஓட்டிகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கரூர்-திருச்சி சாலை, கோவை-சேலம் சாலைகளில் விபத்துகள் அதிகமாக நடக்கிறது.
256 பேர் பலி
மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 600 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 774 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 306 பேர் காயமடைந்துள்ளனர். இதுபோல் 2021-ம் ஆண்டு நடந்த 2 ஆயிரத்து 703 விபத்துகளில் 795 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 413 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு 3 ஆயிரத்து 143 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 885 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 961 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களில் ஆயிரத்து 90 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 256 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்து 243 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் கூறும்போது, 'விபத்துகளை குறைக்கும் வகையில் ஹாட்ஸ்பாட் விபத்து நடக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு விபத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராத நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.