தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும்
தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும்
பூக்கொல்லை பூனைக்குத்தி காட்டாற்றில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூக்கொல்லை பூனைக்குத்தி காட்டாறு
பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகி புதுக்குளத்தில் இருந்து தொடங்கிய இந்த பூனைக்குத்தி காட்டாறு சீவன்குறிச்சி, பழைய நகரம், மாவடுக்குறிச்சி, செல்வவிநாயகபுரம், பூக்கொல்லை வழியாக ரெட்டை வயல் அம்புலி ஆற்றில் கலந்து காட்டாறு கடலில் கலக்கிறது. வெள்ள அபாய நேரங்களில் மழை நீர் இந்த காட்டாறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. தற்போது இந்த காட்டாற்றில் ஆகாயத்தாமரை, கோரைபுற்கள் வளர்ந்து காணப்படுகிறது.
மேலும் காட்டாற்றில் குப்பைகள், கோழி இறைச்சிகள், தென்னைமர கழிவுகள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
தொற்றுநோய் பரவும் அபாயம்
இந்த பூனைக்குத்தி காட்டாறு செல்வவிநாயகபுரம் மற்றும் அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர், போன்ற பகுதிகளின் அருகில் செல்வதால், மழை மற்றும் வெள்ள அபாய நேரங்களில் கரைகள் பலமடைந்து குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் உள்ளே புகுந்துவிடுகிறது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மழை மற்றும் வெள்ள அபாய நேரங்களில் அவதி அடைந்து வருகின்றனர்.
பேராவூரணியில் இருந்து பூக்கொல்லை செல்லும் வழியில் இந்த பூனைக்குத்தி காட்டாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இரவு நேரங்களில் கோழி இறைச்சிகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும்
காட்டாற்றில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை, கோரைபுற்களால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டாற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை, கோரைபுற்கள், தேங்கி கிடக்கும் குப்பைகள் ஆகியவற்றை அகற்றி தூர்வார வேண்டும்.
மேலும் இரவு நேரங்களில் காட்டாற்று பாலத்்தில் கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.