குவிந்து கிடக்கும் மண்; சாலையை மறைக்கும் புதர்கள்:விபத்து அபாயம் நிறைந்த போடிமெட்டு மலைப்பாதை:பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்


குவிந்து கிடக்கும் மண்; சாலையை மறைக்கும் புதர்கள்:விபத்து அபாயம் நிறைந்த போடிமெட்டு மலைப்பாதை:பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடிமெட்டு மலைப்பாதையில் மண் படிந்தும், சாலையை மறைக்கும் வகையில் புதர்கள் வளர்ந்தும் கிடப்பதால் விபத்து அபாயம் நிறைந்துள்ளது. இதை பராமரிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி

போடிமெட்டு மலைப்பாதை

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்கு போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை என 3 மலைப்பாதைகள் உள்ளன. இதில் போடியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடிமெட்டுக்கு செல்லும் சாலை போடிமெட்டு மலைப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் முந்தலில் இருந்து போடிமெட்டு வரை சுமார் 19 கிலோமீட்டர் முழுவதும் மலைப்பாதையாகும். இதில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. பார்ப்பதற்கே ரம்மியமான மலைப்பாதையாக இது காட்சி அளிக்கிறது.

போடிமெட்டு வழியாக மூணாறு, கொச்சி பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, மூணாறு, பூப்பாறை போன்ற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் சென்று வரும் சாலையாகவும் இது திகழ்கிறது. தோட்டத் தொழிலாளர்கள் செல்வதற்காகவே இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான ஜீப்கள் இயக்கப்படுகின்றன.

விபத்து அபாயம்

முக்கியமான மலைப்பாதையான இது, கடந்த சில ஆண்டுகளாகவே ஆபத்தான சாலையாக திகழ்கிறது. அடிக்கடி பாறைகள் சரிந்து விழுந்து வந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை அகலப்படுத்தப்பட்டது. அதன்பிறகும் மழைக் காலங்களில் சாலையில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆனால் தற்போது மழைக் காலம் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் விபத்து அபாயம் நிறைந்த சாலையாக மாறி உள்ளது.

தற்போது இந்த சாலையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மண் படிந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு, சிறு கற்களும் சிதறிக் கிடக்கின்றன. இது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் இந்த சாலையில் சென்று வரும் நிலைமை உள்ளது.

10-வது கொண்டை ஊசி வளைவு முதல் 12-வது கொண்டை ஊசி வளைவு வரையிலான பகுதியில் சாலை சேதம் அடைந்து உருக்குலைந்து கிடக்கிறது. குறிப்பாக கொண்டை ஊசி வளைவு பகுதியில் பெரிய, பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இது வாகன ஓட்டிகளை விபத்துகளில் சிக்க வைக்கும்.

மண், கற்கள்

கரணம் தப்பினால் மரணம் என்பது போல், இந்த சாலையில் குவிந்து கிடக்கும் மண், கற்களால் இருசக்கர வாகனங்களின் சக்கரம் சறுக்கினால் வாகன ஓட்டிகள் சில நூறு அடி பள்ளத்தில் விழுந்து பலியாகும் அபாயம் உள்ளது. அத்துடன் சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்து வளைவு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையிலும், சில இடங்களில் சாலையை மறைக்கும் வகையிலும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. ஏற்கனவே போதிய அளவில் தடுப்புச்சுவர் இல்லாமலும், அடிக்கடி பாறைகள் விழும் நிலையிலும் ஆபத்தான மலைப்பாதையாக உள்ள இங்கு தற்போது விபத்து அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.

ஆபத்துகள் நிறைந்த இந்த மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

பராமரிக்க வேண்டும்

சரவணன் (போடி) :- போடிமெட்டு மலைப்பாதை முழுவதும் தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. இந்த மலைப்பாதையை முறையாக சீரமைப்பது இல்லை. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வதே அபாயகரமாக உள்ளது. சாலையில் கிடக்கும் மண், கற்களை அகற்றவும், சாலையை மறைக்கும் புதர்களை அகற்றவும் சீரான பராமரிப்பு பணிகள் அவசியம். ஆனால், இங்கு மழைக் காலங்களில் பெயரளவுக்கு தான் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக இந்த சாலையோரம் மழைநீர் வடிந்து செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர், ஊற்றுநீர் யாவும் சாலையில் ஓடுகிறது. இது சாலையை விரைவில் சேதம் அடைய வழிவகுக்கும். எனவே இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ராமகிருஷ்ணன் (போடி):- போடிமெட்டு மலைப்பாதை ஏற்கனவே சீரமைக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் மீண்டும் சேதம் அடைந்தது. அப்போது சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. இதுபோன்ற மலைப்பாதையில் வாரம் ஒருமுறையாவது மண், கற்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மாதக்கணக்கில் அதை நெடுஞ்சாலைத்துறையினர் செய்வது இல்லை. விபத்துகள் ஏற்பட்ட பின்பு வருந்துவதை தவிர்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

முத்துச்சாமி (தேனி):- இந்த சாலையில் அறிவிப்பு, எச்சரிக்கை பலகைகள் போன்றவை புதருக்குள் மறைந்துள்ளன. சாலையும் சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலையோரம் தடுப்புச்சுவர்கள் இல்லை. அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இந்த சாலையில் சீரான இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். சாலை வளைவுகளில் எச்சரிக்கை பதாகைகள், சாலையில் போதிய அளவில் ஒளிரும் பட்டைகள் பொருத்த வேண்டும். இதே சாலை போடிமெட்டை கடந்து கேரளாவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதேபோன்ற தரத்தில் தமிழகத்திலும் சாலையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story