குவிந்து கிடக்கும் குப்பைகள், அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பு: கழிவுநீர் சங்கமிக்கும் கம்பம் வீரப்பநாயக்கர் குளம்


குவிந்து கிடக்கும் குப்பைகள், அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பு:   கழிவுநீர் சங்கமிக்கும்   கம்பம் வீரப்பநாயக்கர் குளம்
x

கம்பம் வீரப்பநாயக்கர்குளத்தில் கழிவுநீர் கலக்கிறது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகள், அமலைச்செடிகள் ஆக்கிரமிப்பால் குளம் காணாமல் போகும் நிலை உள்ளது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

தேனி மாவட்டம் கம்பம் வரலாற்று சிறப்பு மிக்க நகரம் ஆகும். இது, பாளையக்காரர்களின் ஆளுமைக்கு உட்பட்ட ஊர் என்பதற்கு பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இதில் ஒன்று தான், வீரப்பநாயக்கர் குளம். பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் இந்த குளம் உள்ளது. கம்பம் நகரின் கிழக்கு பகுதியில் நன்செய் நிலங்களின் பாசன ஆதாரமாக இந்த வீரப்பநாயக்கர் குளம் அமைந்துள்ளது.

36 ஏக்கர் பரப்பளவு

பண்டைக்காலத்தில் மழை நீர் மற்றும் ஆற்று நீரை தேக்கி வைத்து பாசன பகுதிகளுக்கு பயன்படுவதற்காக குளங்கள் வெட்டப்பட்டன. குறிப்பாக பாளையக்காரர்கள் மற்றும் சிற்றரசர் காலத்தில் கண்மாய் மற்றும் குளங்கள் அதிக அளவில் உருவானது. இதில் வீரப்பநாயக்கர் குளமும் ஒன்று. இந்த குளம், சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் பலநூறு ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

வீரப்பநாயக்கர் என்ற பாளையக்காரர் பெயரில் இந்த குளம் அமைக்கப்பட்டது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த குளம் விரைவில் காணாமல் போகும் சூழல் உள்ளது. சினிமா நடிகர் வடிவேல் கிணற்றை காணவில்லை என்று போலீஸ்நிலையத்தில் புகார் கொடுப்பதை போல இன்னும் சில ஆண்டுகளில் வீரப்பநாயக்கர் குளத்தை காணவில்லை என்று புகார் கொடுக்கும் அவலநிலை கூட ஏற்படலாம். அந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுகிறது.

ஆகாய தாமரை செடிகள்

இதேபோல் கழிவு பொருட்களையும் கொட்டி குளத்தை நிரப்பி வருகின்றனர். கம்பம் நகரில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வீரப்பநாயக்கர் குளத்தில் சங்கமிக்கின்றன. மேலும் அமலைசெடிகளும் குளத்தை ஆக்கிரமித்துள்ளன.

பச்சை போர்வையை போர்த்தியிருப்பதை போல குளம் காட்சி அளிக்கிறது. இதனால் குளத்தில் தண்ணீரை சேமித்து வைத்து கோடைகாலத்தில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அருகே உள்ள கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயா்வதும் மிகவும் கடினமாக உள்ளது.

வரலாற்று அடையாளமாக திகழும் வீரப்பநாயக்கர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் கழிவுபொருட்களை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலைச்செடிகளை அகற்றி குளத்தை தூர்வார வேண்டும் என்று கம்பம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இந்த எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக ஏமாற்றமாக தான் எதிரொலித்து கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை தூர்வார பொதுப்பணித்துறையினர் தயக்கம் காட்டுவது புரியாத புதிராக உள்ளது என்று அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். எனவே பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவுநீர் கலப்பதால் மாசு

இதுகுறித்து கம்பம் பகுதி மக்கள் கூறியதாவது:-

ஓ.ஆர்.நாராயணன் (கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்கம்):- வீரப்பநாயக்கர் குளத்தில் முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம் செய்து வந்தோம். அந்த நிலைமாறி, கடந்த 30 ஆண்டுகளாக கம்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் சங்கமிக்கின்றன. இதனால் குளத்தில் மீன்களை வளர்த்தாலும் அவை இறந்து விடுகின்றன. இந்த தண்ணீர் மூலம் விவசாயம் செய்தால் மகசூல் குறைந்த அளவே கிடைக்கிறது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்க வேண்டும்.

பன்னீர்செல்வம் (விவசாயி):- வீரப்ப நாயக்கர் குளத்தை பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்வதில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், குளத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே செல்கின்றன. இதே நிலைமை நீடித்தால் விரைவில் குளம் காணாமல் போகும் சூழல் ஏற்படும். குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் தொற்று நோய் பரவுகிறது. நோய் பாதிப்பு அதிகரிப்பதற்கு முன் குளத்தில் கழிவுநீ்ர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுத்திகரிப்பு நிலையம்

வனிதா நெப்போலியன் (கம்பம் நகராட்சி தலைவர்):- கம்பத்தில் உள்ள சேனை ஓடை கம்பமெட்டு காலனியில் தொடங்கி வீரப்ப நாயக்கர் குளம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தற்போது இந்த ஓடை வழியாக கம்பம் நகரில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீரப்ப நாயக்கர் குளத்தில் சென்றடைகிறது. இதனால் குளம் மாசுபடுகிறது. குளம் மாசுபடுவதை தடுக்க ஓடையை தூர்வாரி அதன் மேல் பகுதியில் சோலார் பேனல் அமைக்கவும், ஓடையில் செல்லும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, விவசாயத்திற்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது குளம் மாசுபடுவது தடுக்கப்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு பொதுப்பணித்துறையினர் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story