குற்றச்சாட்டுக்கு உள்ளான முதியோர் இல்லத்துக்கு 'சீல்'


குற்றச்சாட்டுக்கு உள்ளான முதியோர் இல்லத்துக்கு சீல்
x

காட்பாடி அருகே குகையநல்லூரில் குற்றச்சாட்டுக்கு உள்ளான முதியோர் இல்லத்திற்கு கலெக்டர் உத்தரவின் பேரில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

வேலூர்

காட்பாடி அருகே குகையநல்லூரில் குற்றச்சாட்டுக்கு உள்ளான முதியோர் இல்லத்திற்கு கலெக்டர் உத்தரவின் பேரில் 'சீல்' வைக்கப்பட்டது.

முதியோர் இல்லம்

காட்பாடி தாலுகா குகையநல்லூர் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இங்கு 37 ஆண்கள் உள்பட 69 முதியோர்கள் தங்கி இருந்தனர். இவர்களுக்கு சரியாக சாப்பாடு வழங்கவில்லை எனவும், முதியவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வேலூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. அதன் பேரில் அவர் நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 11-ந் தேதி வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முதியோர் இல்லத்துக்கு சென்று முதியவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் சரியாக சாப்பாடு வழங்காதது, அடித்து துன்புறுத்தப்பட்டது தெரிய வந்தது. அதையடுத்து அங்கு தங்கி இருந்த 61 முதியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இல்லங்களில் சேர்ப்பு

அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலம் தேறிய 48 முதியவர்களை வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இயங்கும் ரெட் கிராஸ் முதியோர் இல்லம், நம்பிக்கை இல்லம், வள்ளலார் முதியோர் இல்லம், விவேகானந்தர் முதியோர் இல்லம், கசம் எம்.பி.கே.ஜி., ஆத்மா சாந்தி முதியோர் இல்லம் ஆகிய முதியோர் இல்லங்களுக்கு சமூகநலத் துறை சார்பில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

'சீல்' வைப்பு

இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான குகையநல்லூரில் செயல்பட்டு வந்த தனியார் முதியோர் இல்லத்துக்கு 'சீல்' வைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அங்கு பணிபுரியும் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி நேற்று காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமையில் வருவாய்த் துறையினர் சென்று அந்த முதியோர் இல்லத்துக்கு 'சீல்' வைத்தனர். அப்போது காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதே முதியோர் இல்லத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story