தலைவரின் கணவரை பார்க்க சொல்வதாக குற்றச்சாட்டு


தலைவரின் கணவரை பார்க்க சொல்வதாக குற்றச்சாட்டு
x

வார்டில் பணிகள் செய்ய தலைவரின் கணவரை பார்க்க சொல்வதாக கூறியதால் ஆற்காடு நகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

நகராட்சி கூட்டம்

ஆற்காடு நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி தேவைகள் மற்றும் குறைகள் குறித்து பேசினர்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உதயகுமார் (அ.தி.மு.க.): நான் கடந்த 8 மாதமக எனது வார்டில் உள்ள சாலையில் தேங்கி கிடைக்கும் மண் திட்டுகளை அகற்றும் படி கூறியும் இதுவரை அகற்றவில்லை. சுகாதார ஆய்வாளரிடம் கேட்டபோது நகர மன்ற தலைவரின் கணவரை போய் பாருங்கள் என்று கூறுகிறார். நகர மன்ற தலைவரை பார்க்க வேண்டுமா?, அல்லது அவரது கணவரை பார்க்க வேண்டுமா? இதற்கு பதில் சொல்லுங்கள்.

கூச்சல் குழப்பம்

சுகாதார ஆய்வாளர் பாஸ்கர்: நான் நகர மன்ற தலைவரின் கணவரை பார்க்கும்படி சொல்லவில்லை. பொய்யான தகவல்.

நகர மன்ற தலைவர்: கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள். நகர மன்ற உறுப்பினராகிய உங்களைவிட நகர மன்ற தலைவரான எனக்கு பொறுப்பு அதிகம் உள்ளது.

துரை ராஜலட்சுமி: எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நகர மன்ற தலைவரின் கணவர் மீது புகார் சொல்கிறார். நகர மன்ற தலைவர் என்ற மரியாதைகூட இல்லாமல் அவர் இருக்கைக்கு எதிரே நின்று கொண்டு கை நீட்டி நாகரீகமற்ற முறையில் பேசுகிறார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பேசிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும். மூன்று நகர மன்ற கூட்டங்களுக்கு வராதபடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் உதயகுமாரின் பேச்சால் அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

விஜயகுமார்: கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்யாத சாதனைகளை தி.மு.க. நகர மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் செய்து சாதனை படைத்துள்ளது. ஆற்காடு பகுதியில் உள்ள ஓட்டல்கள், மாலை நேர சிக்கன் பக்கோடா கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உள்ள எண்ணெய்களை பயன்படுத்துகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

காமாட்சி பாக்கியராஜ்: மாசிலாமணி நகர் பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. ஆனால் சொத்து வரி மட்டும் செலுத்தி வருகின்றனர். குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வி கோபு: நகரில் உள்ள முக்கியமான சாலைகள் மற்றும் தெருக்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.

ஆணையாளர்: மக்களின் பங்களிப்புடன் நகராட்சி இணைந்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கலாம்.

இவ்வாறு வாதம் நடைபெற்றது. கவுன்சிலர்கள் பொன். ராஜசேகர், செல்வம், குணாளன் ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story