கைதிகளை காவலர்கள் தாக்குவதாக குற்றச்சாட்டு
திருச்சி மத்திய சிறையில் கைதிகளை சிறைக்காவலர்கள் தாக்குவதாக குற்றம்சாட்டி உறவினர்கள், வக்கீல்கள் சிறை வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, ஜூன்.5-
திருச்சி மத்திய சிறையில் கைதிகளை சிறைக்காவலர்கள் தாக்குவதாக குற்றம்சாட்டி உறவினர்கள், வக்கீல்கள் சிறை வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய சிறை
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 8 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை காமராஜபுரம் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த காளி என்ற வெள்ளைக்காளி (வயது 32) என்பவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களுடைய உறவினர்கள், வக்கீல்கள் மனுபோட்டு நேரில் சந்திப்பது வழக்கம். அதன்படி, காளியை பார்ப்பதற்காக அவருடைய வக்கீல் லெனின் உள்பட 3 பேர் மனு போட்டு சிறைக்குள் சென்று காளியை சந்தித்ததாக தெரிகிறது.
தாக்கியதாக புகார்
அப்போது, காளி, தன்னுடன் சிறையில் இருப்பவர்களை சிறைக்காவலர்கள் தாக்கியதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை சாதியை கூறி திட்டியதுடன், தன்னையும் அவர்கள் தாக்குவதாக கூறி அழுததாக கூறப்படுகிறது. இதனால் சிறைக்காவலர்கள், முழுமையாக அவரை பேச விடாமல் சிறைக்குள் அழைத்துச்சென்றுவிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவருடைய வக்கீல் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக புகார் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த காளியின் சகோதரி மற்றும் உறவினர்கள், வக்கீல்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு திரண்டு வந்தனர்.
வாக்குவாதம்
அவர்கள், சிறை வாசலுக்கு சென்று அங்கிருந்த சிறைக்காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிறையில் உள்ள சிறைவாசிகளை, அங்குள்ள காவலர்கள் சாதியை கூறி திட்டி, தாக்குவதாகவும், அவர்களை தாக்க காவலர்களுக்கு யார் அனுமதி அளித்தது? என்றும் கேள்வி எழுப்பி சிறைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர்கள் பாஸ்கர், ராஜசேகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், ஜெயா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் காளியின் உறவினர்கள் மற்றும் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விசாரணைக்கு பரிந்துரை
இருப்பினும் அவர்கள் இரவு 7 மணிக்கு மேலும் காளியை பார்த்துவிட்டுதான் செல்வோம் என்று சிறை வளாகத்திலேயே காத்திருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, காளியின் வக்கீல் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இதுபற்றி விசாரணை நடத்த சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, கைதிகள் யாரும் தாக்கப்படவில்லை. அதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறினார். ஏற்கனவே கடந்த வாரம் ரபீக் என்ற சிறைவாசியை காவலர்கள் தாக்குவதாகவும், அதனால் தற்கொலை செய்யப்போவதாகவும் தனது மனைவிக்கு பேசிய ஆடியோ வெளியான நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.