திருத்தங்கல் மாணவர்கள் சாதனை
திருத்தங்கல் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
சிவகாசி,
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் காஞ்சீபுரத்தில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கே.எம்.கே.ஏ. மெட்ரிக்பள்ளி மாணவர்கள் வளைபந்து, குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான வளைபந்து இரட்டையர் பிரிவில் மகேஸ்வரி, தேவிபிரியா ஆகியோர் தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் ஆகாஷ் பிரவின், தீபக் ஆகியோர் தங்கம் வென்றனர். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜோதிகேசவன், சண்முகராஜ் ஜோடி தங்கம் வென்றது. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோதிகேசவன் தங்கம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மகேஸ்வரி வெண்கலம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குத்துசண்டை போட்டியில் ராஜேஷ்குமார் வெண்கலம் வென்றார். பதக்கம் பெற்ற சாதனை மாணவர்களை உறவின்முறை தலைவர் பாக்கியம், பள்ளி தாளாளர் மாணிக்கம், செயலாளர் கணேசன், பொருளாளர் சத்தியமூர்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முதல்வர் அருள்புளோரா, உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜசேகர், கோயில்பிள்ளை, ரமணி ஆகியோர் பாராட்டினர்.