அரசு பள்ளி ஆண்டு விழா
அரசு பள்ளி ஆண்டு விழா
உடுமலை
உடுமலையையடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் விளையாட்டுப் போட்டிகளை பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணவேணி தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், லக்கி கார்னர் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பாட்டக் குழுவினர் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்ட கலையை செய்து காட்டினர். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் தலைமையில் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது பெற்றோர்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி வரவேற்றுப் பேசினார். கல்வியின் முக்கியத்துவம், விவசாயத்தின் முக்கியத்துவம், யோகாவின் நன்மைகள், நாட்டுப்புற நடனங்கள், கரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், எண்ணும் எழுத்தும் செயல்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமான பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார்.
-----------
3 காலம்