கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்நடைகள் சாலையில் சுற்றினால் நடவடிக்கை-ஆணையாளர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்நடைகள் சாலையில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் (பொறுப்பு) சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் 1920 பிரிவு 197, தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்திகள் மற்றும் கட்டிட விதிகள் 2019-ன் கீழ் கட்டிடங்கள் கட்டுவதற்கு முறையாக நகராட்சியின் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற பின்னரே கட்டிடங்கள் கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதுடன், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், நகராட்சி பகுதியில் மாடுகள் மற்றும் பன்றிகள் வளர்ப்பவர்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக வைத்தே அவற்றை வளர்க்க வேண்டும். சாலைகளில் அவைகள் உணவுக்காக சுற்றித் திரிந்து போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாகவும் உள்ளன. எனவே, கால்நடைகளை கண்டிப்பாக வெளியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிய விடக்கூடாது. தவறினால் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கோசாலையில் ஒப்படைக்கப்படுவதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.