கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு: அனுமதிக்கப்படாத பகுதிகளில் மாடுகளை அவிழ்த்தால் கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு: அனுமதிக்கப்படாத பகுதிகளில் மாடுகளை அவிழ்த்தால் கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கண்டுபட்டியில் இன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படாத இடங்களில் மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை,

கண்டுபட்டியில் இன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படாத இடங்களில் மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

மஞ்சுவிரட்டு

போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் இன்று நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்ட காளைகள், முன் அனுமதி பெற்ற கடிதத்துடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனங்களில் காளைகளை கொண்டு வருபவர்கள் கால்நடை மருத்துவரின் தகுதிச்சான்று மற்றும் மஞ்சுவிரட்டில் கலந்துகொள்வதற்கான தகுதிச்சான்றினை பெற்றிருந்தால் மட்டுமே சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படுவாா்கள்.

காளைகள் ஏற்றி வரும் வாகனங்களில் 2 பேருக்கு மேல் வரக்கூடாது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்கள், போதைப்பொருட்கள் உட்கொண்டிருக்கக்கூடாது. கண்டுபட்டி மஞ்சுவிரட்டிற்கு காளைகள் மற்றும் பார்வையாளர்கள் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும்.

வழித்தடங்கள்

காளையார்கோவில் பகுதிகளிலிருந்து வரும் காளைகள் கொல்லங்குடி, முத்தூர், வாணியக்குடி, சிறுசெங்குளிபட்டி வழியாக மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதிக்கு செல்ல வேண்டும். திருப்பத்தூர் பகுதிகளிலிருந்து வரும் காளைகள் பாகனேரி, இளந்தமங்கலம், மாங்குடிபட்டி வழியாக செல்ல வேண்டும். காரைக்குடி மற்றும் கல்லல் பகுதிகளிலிருந்து வரும் காளைகள் பனங்குடி, நடராஜபுரம் வழியாக செல்ல வேண்டும். மேலூர் பகுதிகளிலிருந்து வரும் காளைகள் ஒக்கூர், காளையார்மங்கலம், சின்னுடையான்பட்டி வழியாக செல்ல வேண்டும். சிவகங்கை பகுதிகளிலிருந்து வரும் காளைகள் நாட்டரசன்கோட்டை, கவுரிபட்டி வழியாக மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதிக்கு செல்ல வேண்டும்.

கடும் நடவடிக்கை

வாடிவாசலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களிலோ காளைகளைஅவிழ்த்து விடக்கூடாது. அவ்வாறு மீறி விடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். வாடிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் சுமார் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். எனவே விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story