ஷட்டர்களை மாற்றியமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் ஆனைக்குட்டம் அணையில் உள்ள பழுதான ஷட்டர்களை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்ப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் ஆனைக்குட்டம் அணையில் உள்ள பழுதான ஷட்டர்களை மாற்ற தாமதம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்ப்பட்டுள்ளது.
ஷட்டர் பழுது
விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணை அர்ச்சனா நதியின் குறுக்கே கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் 3, ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனைக்குட்டம் அணைப் பகுதியில் உறை கிணறுகள் தோண்டப்பட்டு அவைகளில் இருந்து விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது இந்நிலையில் அணையின் ஷட்டர் முறையாக அமைக்கப்படாததால் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் மழைக்காலங்களிலும் தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது. பொதுப்பணித்துறையினரும் ஷட்டர் பழுது பார்ப்பதற்கு என அரசிடம் பலமுறை நிதி ஒதுக்கீடு பெற்று பழுது பார்த்ததாக கூறினாலும் இதுவரை அணையில் இருந்து நீர்க்கசிவு நிற்கவில்லை.
வலியுறுத்தல்
இந்நிலையில் தற்போது ரூ.49 கோடி மதிப்பீட்டில் அணையின் ஷட்டர்களை முழுமையாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் நிதி ஒதுக்கீடு கிடைக்காத நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்து அரசிடம் வலியுறுத்தி இந்த அணை ஷட்டர்களை முழுவதுமாக மாற்றியமைக்க மதிப்பீட்டுத் தொகையை விரைந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த அணை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்படும்நிலை ஏற்படும்.