18 வயது பூர்த்தி அடையாதவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை


18 வயது பூர்த்தி அடையாதவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

18 வயது பூர்த்தி அடையாதவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

சென்னை தொழிலாளர் ஆணையரும், முதன்மை செயலாளருமான அதுல் ஆனந்த், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தலைமையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர், மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் குழுவினர், பள்ளி கல்வித்துறை சமக்ரசிக்சா பணியாளர்கள், தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் இணைந்து தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், உடன்குடி, கழுகுமலை, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் கடைகள், நிறுவனங்களில் 18 வயது பூர்த்தி அடையாத 16 வளர் இளம் பருவ தொழிலாளர்களும், தீப்பெட்டி கம்பெனியில் 3 வளர் இளம் பருவ தொழிலாளர்களும் பணியமர்த்தியது கண்டறியப்பட்டு, வளம் இளம் பருவ தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம்-1986 மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எவ்விதமான பணியிலும், 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியில் அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணியமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை எவரேனும் பணியமர்த்தினால் அதுகுறித்த விவரத்தினை குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரை 0461-2340443 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.


Next Story