லஞ்சம் வாங்கிய கவுன்சிலர் மீது நடவடிக்கை
கூடலூரில் வீடு கட்டுவதற்கு லஞ்சம் வாங்கிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் நகராட்சி கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
கூடலூர்,
கூடலூரில் வீடு கட்டுவதற்கு லஞ்சம் வாங்கிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் நகராட்சி கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
கூடலூர் நகராட்சியில் 7-வது வார்டு கவுன்சிலராக உள்ள சத்திய சீலன் என்பவர் வீடு கட்டுவதற்காக தனி நபர் ஒருவரிடம் பணம் வாங்கும் வீடியோ காட்சி கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி கூடலூர் நகராட்சி மன்ற கூட்டத்திலும் எதிரொலித்தது. அப்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர் சத்தியசீலன், நான் ரூ.50 ஆயிரம் பணம் வாங்கியது உண்மை. அதில் ரூ.5 ஆயிரம் எடுத்து கொண்டு மீதி பணத்தை நகராட்சி தலைவரிடம் கொடுத்து விட்டேன் என தெரிவித்தார். இதற்கு மன்ற தலைவர் பரிமளா மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் கோரிக்கையின் படி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார். இதனிடையே கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதமும், கூச்சல்-குழப்பமும் ஏற்பட்டது.
கலெக்டரிடம் புகார் மனு
இந்தநிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை நேற்று முன்தினம் இரவு கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ், கவுன்சிலர்கள் ராஜூ, லீலா, ஷகிலா, ராஜேந்திரன், ஜெயலிங்கம், மும்தாஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதில், வீடு கட்டுவதற்கு லஞ்சம் வாங்கிய கவுன்சிலர் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கூடலூர் நகராட்சி மன்றத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.