சுகாதாரத்தை கடைபிடிக்காத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
அரசு பள்ளிகளில் சுகாதாரத்தை கடைபிடிக்காத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
விழுப்புரம்
கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை அடுத்த தளவானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி வளாகம், குடிநீர், கழிப்பறை வசதி, ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களிடம் கேள்விகளை கேட்டறிந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாடம் நடத்தி கேள்விகளை கேட்டு சரியாக பதில் அளித்தவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அதோடு மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பாடங்களை நடத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
அறிவுரை
மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் இயற்கை உபாதையை கழிப்பதை தவிர்த்து கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவறையை பயன்படுத்திய பின்பு கை, கால்களை சுத்தமாக வைத்தல், தன் சுத்தம் பேண வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
அதோடு பள்ளிகளில் சுகாதார வளாகத்தை சுத்தமாக பராமரித்திட அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு தினந்தோறும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பும், மதிய உணவு இடைவெளிக்குப்பின்பும் கழிவறையை பராமரித்திட அறிவுறுத்தியதோடு இதனை சரியாக கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேம்பாலம் கட்டும் பணிகள்
முன்னதாக ரூ.16.5கோடி மதிப்பில் விழுப்புரம் காவணிப்பாக்கத்தில் மலட்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து திருப்பாச்சனூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்ட அவர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் சத்துமிக்க காய்கறி, கீரை வகைகளை சேர்த்து தரமாக, சுகாதாரமான முறையில் சமைத்து வழங்கும்படி கூறினார்.
மேலும் காவணிப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்ட கலெக்டர் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை சிறப்பான முறையில் செய்து முடிக்க வேண்டுமென ஊராட்சி செயலருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலர் சபானா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி உள்பட பலர் உடனிருந்தனர்.