குழந்தை திருமணம் செய்து வைத்தால் பெற்றோர் மீது நடவடிக்கை


தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை திருமணம் செய்து வைத்தால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வு முகாமில் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

நீலகிரி

பந்தலூர்

குழந்தை திருமணம் செய்து வைத்தால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வு முகாமில் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

விழிப்புணர்வு முகாம்

பந்தலூர் அருகே கூவமூலா பழங்குடியின கிராமத்தில் வட்ட சட்ட பணிக்குழு, வருவாய்துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதற்கு கூடலூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் வரவேற்று பேசினார். மாவட்ட நீதிபதி மற்றும் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகன் கலந்துகொண்டு பழங்குடியினருக்கு மகாத்மா காந்தி மற்றும் தலைவர்கள் அடங்கிய புகைப்படங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

படிக்க வைக்க வேண்டும்

போதைப்பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தை திருமணம் செய்வதால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் காதலித்தால் அறிவுரை கூறி திருமண வயது வந்த பிறகு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். திருமண வயதிற்கு முன்பு குழந்தை திருமணம் செய்து வைத்தால் பெற்றோர் மீதும் நடவடிக்கை பாயும். இதனை தடுக்க ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு கல்வி ஆர்வத்தை தூண்ட வேண்டும். பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும். பள்ளி படிப்புகள் முடிந்தவுடன் கல்லூரி படிப்புகளை தொடந்து படிக்க வைக்க வேண்டும். பழங்குடியின குழந்தைகள் நன்கு படித்து அரசு பணிகளில் சேர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரிசி, பருப்பு

பின்னர் அனைவருக்கும் அரிசி, பருப்பு, பெட்சீட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

முகாமில் தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வக்கீல்கள் சினுவர்க்கீஸ், சிவசுப்பிரமணியம், சந்திரபோஸ், கணேசன், ஜான்சன் சாபு மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story