10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சி.பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தின் செல்லுபடி தன்மை குறித்த சந்தேகம் காரணமாக 10 ரூபாய் நாணயங்களை ஏற்க தயங்குகிறார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்திய அரசின் கீழ் உள்ள நாணயச்சாலைகளால் தயாரிக்கப்படும் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. இந்நாணயங்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மதிப்புகளின் பல்வேறு கருப்பொருட்களை பிரதிபலிக்கும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளன. மேலும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வாங்க மறுத்தால் நடவடிக்கை
நாணயங்கள் நீண்ட ஆயுளை கொண்டிருப்பதால், வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களை கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் சந்தையில் புழங்குகின்றன. பத்திரிகை வெளியீடுகள் மூலம் இந்த நாணயங்களின் தனித்துவமான அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். இந்நாணயங்களை பரிவர்த்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படலாம். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.