அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை


அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை
x

தவறு செய்யும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த பணிநீக்கத்துக்கு ஒப்புதல் கோரி, தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையருக்கு ஆவணங்களை சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் அனுப்பினர். அப்போது, விசாரணை குறித்து தகவல்கள் கொண்ட பல ஆவணங்கள் முறையாக இணைக்கப்படாததால் பணி நீக்கத்துக்கு ஒப்புதல் அளிக்க தொழிலாளர் சிறப்பு துணை ஆணையர் மறுத்துவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மீண்டும் விசாரணை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் சில முக்கிய ஆவணங்களை தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையரிடம் போக்குவரத்து கழக அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் உயர் அதிகாரிகள் இதுபோலத்தான் செயல்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு வருகிறது.

அதாவது வேண்டும் என்றோ அல்லது ஊழல் காரணத்துக்காகவோ போக்குவரத்து தொழிலாளர்களுடன் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இதுபோல செயல்படுகின்றனர்.

நிதி இழப்பு

இதனால், சில வழக்குகளில் நூறு சதவீதம் ஊதிய பாக்கியை கூட நடவடிக்கைக்கு உள்ளான தொழிலாளர்கள் பெற்று விடுகின்றனர். இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறிழைக்கும் போக்குவரத்து கழகத்தின் கண்டக்டர், டிரைவர் மற்றும் ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், உயர் அதிகாரிகள் அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட தொழிலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

அலட்சிய அதிகாரிகள்

எனவே, இந்த வழக்கில் போக்குவரத்து துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்கின்றேன். அவர், தப்பு செய்யும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி, அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் 2 வாரத்துக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story