கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை
கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.
குடியாத்தம்
கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.
டி.ஐ.ஜி. ஆய்வு
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேற்று இரவு திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது பணியில் இருந்த காவலர்களிடம் பணி குறித்து கேட்டறிந்து, போலீசார், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். வழக்கு சம்பந்தமான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நடவடிக்கை
பொதுமக்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர்கள், வசூலிப்பவர்கள், பொதுமக்களின் சொத்துக்களை தவறான முறையில் எழுதி வாங்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இணைய வழி குற்றங்கள், டிஜிட்டல் வழி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் இதனை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டம் தோறும் சைபர் கிரைம் போலீசார் உள்ளனர்.
தற்போது இந்த குற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் சைபர் கிரைம் போலீசார் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தேவையில்லாத ஆப் களை செல்போனில் டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும். தேவை இன்றி வரும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்கக் கூடாது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி எந்தவித தகவல் கேட்டாலும் தெரிவிக்கக் கூடாது.
மேலும் கடன் வசூலிக்கும் வங்கி ஏஜெண்டுகள் என பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவேண்டும்.
இலவச தொலைபேசி எண்
வேலூர் சரகம் முழுவதும் சைபர் கிரைம் போலீசார் பள்ளி, கல்லூரிகளில் இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் இணையவழி குற்றங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இலவச தொலைபேசி எண் 1930-ஐ பயன்படுத்த வேண்டும்.
ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிறுவர்கள் குளிக்கவோ, விளையாடவோ செல்லும் போது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் உடன் சென்று அவர்களை பாதுகாப்பான முறையில் அழைத்துச் சென்று வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.