மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை


மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை
x

அந்தியூரில் மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் அவருடைய தந்தை புகார் அளித்தார்.

ஈரோடு

அந்தியூரில் மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் அவருடைய தந்தை புகார் அளித்தார்.

திருமணம்

அந்தியூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு அவர் பரபரப்பு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 19 வயதான எனது மூத்த மகள் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திருமணம் நடத்த இருந்தோம். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற எனது மூத்த மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்பிறகு பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எனது மகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது எனது வீட்டுக்கு அருகே குடியிருக்கும் 25 வயதுடைய பெண் எனது மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. எனது மகளை என்னுடன் வந்துவிடுமாறு அழைத்தோம். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார்.

கருமுட்டை

இந்த நிலையில் எனது மகளை திருமணம் செய்த பெண்ணுக்கு போதை பழக்கம் உள்ளது தெரியவந்தது. அவர் எனது மகளுக்கும் ஆசை வார்த்தை கூறி கஞ்சா, போதை ஊசி பழக்கத்துக்கு அடிமைப்படுத்தி உள்ளார்.

மேலும், எனது மகளை ஏமாற்றி வரும் அந்த பெண் பல பெண்களையும் ஏமாற்றி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர் சில பெண்களிடம் இருந்து கருமுட்டையை எடுத்து விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே விசாரணை நடத்தி எனது மகளையும், அந்த பெண்ணையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எனது மகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story