சொத்து வரியை விரைந்து செலுத்தாவிட்டால் நடவடிக்கை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
சொத்து வரியை விரைந்து செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரியை நகராட்சிகளின் சட்டம் 1920-ன்படி, முதல் அரையாண்டுக்கான தொகை மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான தொகையை விரைந்து செலுத்த வேண்டும். 2022-2023 -ம் நிதியாண்டு வரை சொத்துவரி செலுத்தவேண்டிய காலம் 31.10.2022 தேதியுடன் முடிவடைந்துவிட்டது. எனவே விருத்தாசலம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை உள்ளிட்டவற்றை உடனடியாக நிலுவையின்றி சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் வரி செலுத்த தவறியவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய இடங்களில் வைக்கப்படும். மேற்கண்ட தகவல் விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.