உரிமம் இன்றி குழந்தைகள் விடுதி நடத்தினால் நடவடிக்கை


உரிமம் இன்றி குழந்தைகள் விடுதி நடத்தினால் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 6:50 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி குழந்தைகள் விடுதி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்

தமிழ்நாடு சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் படி தனியாரால் நடத்தப்படும் குழந்தைகள் விடுதிகள் உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன. இது பற்றி கடந்த ஆண்டே தெளிவாக குறிப்பிட்டு, கடலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் குழந்தைகள் விடுதிகள் பதிவு பெற உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து 18 தனியார் குழந்தைகள் விடுதிகள் தவிர வேறு எவரும் உரிமம் பெற கடலூர் மாவட்ட கலெக்டரை அணுகவில்லை. தற்போது தனியார் குழந்தைகள் விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதாகவும், அதில் தங்கி உள்ளவர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

உரிமம்

தற்போதும் பல விடுதிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதும், அதில் தங்குவோர் சேர்க்கை முறையாக பதிவு செய்யாமல் இருப்பதும் தெரிய வந்தது. அவ்வாறு முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் குழந்தைகள் விடுதிகளை நடத்த, விடுதி உரிமையாளர்கள் பல்வேறு நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதன்படி, விடுதியின் உரிமம் பெற, தீயணைப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று மற்றும் படிவம்-டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்த வேண்டும். மேலும் விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். (குளியலறை மற்றும் உடைமாற்றும் அறைகளைத் தவிர). விடுதி மேலாளர் மற்றும் விடுதி பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பதிவு பெற்ற மருத்துவர் மூலம் உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விடுதியில் சேர்க்கை பதிவேடு உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.

மேலும் தனிக்குடும்பமாக வசிப்பதற்கென்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து, அதில் எந்த உரிமமும் பெறாமல் விடுதியாக உரிய உரிமம் மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை 04142-221080 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story