திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்கை:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்


திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்கை:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்க எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வைகாசி விசாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகத் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள பாதயாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்து கொண்டு இருக்கின்றனர். சாலையின் இடது புறமாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதே பக்கத்தில் பாதயாத்திரை பக்தர்களும் செல்லும் போது, வாகனங்கள் வருவதை கவணிக்க முடிவது இல்லை.

ஆகையால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகனச்சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின் படி பாதசாரிகள் எப்போதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அப்போதுதான் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை பாதசாரிகள் கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளளாம்.

ஒளிரும் ஸ்டிக்கர்

அதே போன்று பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூடுமானவரை இரவு நேரம் பாதுகாப்பான இடங்களில் தங்கி விட்டு பகல் நேரத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு, இரவு நேர பாதயாத்திரையை தவிர்க்குமாறும், ஒருவேளை இரவு நேர பாதயாத்திரை மேற்கொண்டால் முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதையாத்திரை செல்ல வேண்டும். இந்த வைகாசித் திருவிழாவை விபத்தில்லாமல், பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சர்ப்ப காவடி...

மேலும் கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையிலானவற்றையோ, கொடிகளையோ கொண்டு வரவோ கூடாது. சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வைகாசி விசாக திருவிழா அமைதியாகவும், சிறப்புடனும் நடைபெற பக்தர்கள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story