பட்டாசு ெதாழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் கூறினார்.
வத்திராயிருப்பு,
பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் கூறினார்.
பாத யாத்திரை
விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்டத்தை மக்களின் வாழ்வுரிமை வளர்ச்சி அடிப்படையில் முதன்மை மாவட்டமாக உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் வகையில் 3 இடங்களில் இருந்து பாத யாத்திரை தொடங்கியது.
இந்தபாதயாத்திரை குழுவினர் பொதுமக்களை சந்தித்து மக்களின் தேவை அடிப்படையிலான கோரிக்கைகளை நிறைவேற்றும் செயல் திட்டத்தினை விளக்கி கூறுகின்றனர். இந்த குழுவினர் வருகிற 20-ந் தேதி கலெக்டர் அலுவலகம் வந்தடைகின்றனர். அன்றைய தினம் கலெக்டரிடம் மாவட்டத்தினை முதன்மை மாவட்டமாக ஆக்குவதற்கான செயல்திட்ட கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வழங்குகின்றனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பில் பாதயாத்திரையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற பிரமாண்ட பேரணி திருப்பூரில் நடைபெற உள்ளது. அந்தப்பேரணியை அண்ணாமலை வந்து பார்க்கட்டும். அப்போது அவருக்கு தெரியும் கம்யூனிஸ்டு கட்சிக்கு சுவடு இருக்கிறதா, இ்ல்லையா என்று.
விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டாசு மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கிறது. எனவே பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்.
தோழமை கட்சி
பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சட்டரீதியான உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு செய்யக்கூடிய நல்ல திட்டங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும். மக்களுக்கு எதிராக ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக தயக்கமில்லாமல் விமர்சனம் செய்வோம். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி தோழமை கட்சியாக நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொண்ணு பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பரளச்சி
அதேபோல பரளச்சி கிராமத்தில் இருந்து மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் யாத்திரையை முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தொடங்கி வைத்தார்.
சொக்கநாதன் புத்தூர் கிராமத்திலிருந்து விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் பேரணியை தொடங்கி வைத்தார்.