நயன்தாரா விவகாரத்தில் நடவடிக்கை
நயன்தாரா-விக்னேஷ்சிவன் விவகாரத்தில் விசாரணை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நயன்தாரா-விக்னேஷ்சிவன் விவகாரத்தில் விசாரணை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மதுரை வருகை
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அந்த துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அவர் தொடங்கி வைத்தார். துணை இயக்குனர் அர்ஜூன் குமார், மதுரை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மூலிகை விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய நிகழ்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பில் அஸ்வகந்தா மூலிகை பயிர் சாகுபடி நடைமுறைபடுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித்துறைகளின் அமைச்சர்கள், துணை செயலாளர்கள், அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காய்ச்சல் முகாம்கள்
கடந்த 20 நாட்களுக்கு மேலாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. இதில் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோல், தொடர்ந்து தினமும் ஆயிரம் இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் எச்.1 என்.1 வைரஸ் காய்ச்சல் தினமும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இருந்து வந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 30-க்கும் கீழ் குறைந்துள்ளது. டெங்கு மற்றும் எச்.1 என்.1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நயன்தாரா மீதான புகார்
தமிழகத்தில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லை. மதுரையில் கூட மருந்து கிடங்கு உள்ளது. நீங்களே போய் பாருங்கள். தட்டுப்பாடு இருந்தால் சொல்லுங்கள். வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் எந்த மாதிரியான விதிமுறை மீறல் மற்றும் முரண்பாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.