அதிகமாக வட்டி கேட்கும்நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மனு


அதிகமாக வட்டி கேட்கும்நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மனு
x

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மனு கொடுத்தனா்.

ஈரோடு

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

பொலவக்காளிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் 493 பேர், தேனி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் தலா ரூ.30 ஆயிரம் வீதம் கடன் பெற்றுள்ளோம். இந்த கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 12 மாத தவணையில் ரூ.39 ஆயிரம் வரை செலுத்தி உள்ளோம்.

ஆனால் இன்னும் ரூ.19 ஆயிரம் வட்டி செலுத்த வேண்டும் என நிதி நிறுவன உரிமையாளர் எங்களை கட்டாயப்படுத்துகிறார். மேலும் கடனுக்காக மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் 93 பேரிடம் வங்கி காசோலைகளை பெற்றுவைத்துள்ள அவர், அதனை வங்கியில் செலுத்தி நிர்வாகிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என மிரட்டுகிறார். மேலும் பெண்களை மிகவும் அவதுறாக பேசுகிறார்.

வாங்கிய கடனை காட்டிலும் கூடுதலாக ரூ.9 ஆயிரம் செலுத்தி உள்ள நிலையில், கடன் தொகையை இரட்டிப்பாக திருப்பி செலுத்தக்கோரும் நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, அவர் வசம் உள்ள எங்களின் வங்கி காசோலைகள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.


Next Story